ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அனுமதியின்றி சி.பி.ஐ நுழைவதற்கு மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அந்த மாநிலத்தில் சி.பி.ஐ நுழைவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சி.பி.ஐ நுழைவதற்கு தடை விதித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், சந்திரபாபு நாயுடுவின் முடிவை பாராட்டியதுடன், பாஜக தனது அரசியல் லாபத்திற்காக சி.பி.ஐ-யை பயன்படுத்துவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
நீதிமன்ற உத்தரவை தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் சி.பி.ஐ உள்ளே வர அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இவரது முடிவை பல்வேறு தலைவர்கள் பாராட்டி வரும் நிலையில், மற்ற மாநிலங்களிலும் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.