கோவாக்சின் தடுப்பூசியை மகாராஷ்டிரா அரசே தயாரிக்க அனுமதி!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ள நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை அம்மாநில அரசே தயாரித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஹாப்கின் பயோபார்மா (HAFFKINE BIOFARMA) நிறுவனத்திடம் இருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்ததன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருடகாலத்திற்கு கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரிக்க ஹாப்கின் நிறுவனத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் கோவாக்சின் தயாரிப்பில் அனுபவம் உள்ளவர்களை மருந்து தயாரிப்பின் ஆரம்பகட்டத்தில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஹைதாராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை தயாரித்து அதற்கான காப்புரிமை பெற்றுள்ள நிலையில், தொழில்நுட்ப பரிமாற்றம் திட்டம் அடிப்படையில் ஹாப்கின் பயோபார்மா நிறுவனம் மருந்தை தயாரிக்க உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவாக்சினை தங்களது மாநிலத்திலேயே தயாரிக்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version