மும்பை பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு எதிரொலியாக, கடந்த 6 வர்த்தக நாட்களில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச வர்த்தகம் பெருமளவில் முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கடும் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை ஆயிரத்து 448 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 297 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 431 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 201 புள்ளிகளில் முடிவடைந்தது. இதனிடையே, கடந்த 6 வர்த்தக நாட்களில், மும்பை பங்குச்சந்தை 2 ஆயிரத்து 661 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இதன்மூலம், 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.