மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார்.
சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி அமைகிறது. கூட்டணி சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். மும்பை சிவாஜி மைதானத்தில் இதற்காகக் கோட்டை போல் தோற்றமளிக்கும் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமர்வதற்காக ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவையொட்டி மைதானத்தில் உள்ள வீர சிவாஜி சிலை, பால் தாக்கரே நினைவிடம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொள்வதால் பூங்கா திடலைச் சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சிவசேனா கட்சிக்கு முதலமைச்சர் பதவியும் 15 அமைச்சர் பதவிகளும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரசுக்குத் துணை முதலமைச்சர் பதவியும் 13 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளது. காங்கிரசுக்குச் சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் 13 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளது. எனினும் இன்று மாலை நடைபெறும் விழாவில் ஒவ்வொரு கட்சியிலும் இருவர் மட்டும் பதவியேற்றுக்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.