இராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் டி காக் 23 ரன்களும், ரோகித் சர்மா 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 30 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜாஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களில் ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் 6 ரன்களிலும், சஞ்சு சாம்சன் ரன் எடுக்கமலும் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 18 புள்ளி 1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 136 ரன்கள் மட்டுமே எடுத்து தேல்வியைச் சந்தித்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Exit mobile version