13-வது ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை- பஞ்சாப் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் ரோஹித் ஷர்மா, டிகாக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் ஓவர் முடிவதற்குள்ளாகவே, ஷெல்டன் வீசிய 5வது பந்து ஸ்டெம்புக்கு போக, டிகாக் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து வந்த சூர்யாகுமார் யாதவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 4 ஓவர் முடிவில் 2விக்கெட்டை இழந்து 22 ரன்களை சேர்ந்திருந்தது. மும்பை அணி.
தொடர்ந்து ரோஹித்ஷர்மாவுடன் இஷான்கிஷன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை பவுண்டரியை நோக்கி விரட்டினர். அதிரடி காட்டிய ரோஹித் ஐ.பி.எல். போட்டிகளில் 5ஆயிரம் ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ரோஹித் – இஷான்கிஷன் இணையை 13வது ஓவரில் கிருஷ்ணப்பா கவுதம் பிரித்தார். தொடர்ந்து, பஞ்சாப் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ரோஹித் சர்மாவை ஷமி வெளியேற்றினார். 17 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை சேர்த்தது மும்பை.
டெத் ஓவர்களில் பொலார்டு – ஹர்திக் பாண்ட்யா இணை பந்துகளை மைதானத்தின் நாலாப்புறமும் பறக்க விட்டது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில், ஷெல்டன், சமி,கிருஷ்ணப்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.