ஹைதராபாத் அணியை வீழ்த்தி தகுதி சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 51 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாசில் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து  மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். கேப்டன் ரோகித் ஷர்மா கலில் அகமதுவின் பந்து வீச்சில் நபியிடம் கேட்ச் கொடுத்து 24 ரன்னில் வெளியேறினார். பின்னர் நிதானமாக விளையாடிய குயிண்டன் டி காக் அரைசதமடித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் ஓரளவிற்கு தங்களது பங்களிப்பை செலுத்தினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது, குயிண்டன் டி காக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 2 சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்களை எடுத்தார்

இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்தில் ஓரளவிற்கு அடித்து விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அணியின் ஸ்கோர் 40 ரன்னை எட்டியபோது தொடக்க ஆட்டக்காரர் ரித்திமன் சாகா, பும்ரா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மணிஸ் பாண்டே அதிரடியாக விளையாடி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

சீரான இடைவெளியில் மும்பை அணியின் பந்து வீச்சில் ஹைதராபாத் அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. 7 ஆவது விக்கெட்டுக்கு மணிஸ் பாண்டியுடன் ஜோடி சேர்ந்த முகமது நபி அடித்து ஆட ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது, இந்த நிலையில், ஆட்டத்தின் 19.4 ஆவது பந்தில் நபி வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் 2 ரன்னும் இரண்டாவது பந்தில் 6 ரன்னும் எடுத்த நிலையில் போட்டி சமனானது. இதனை தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

இந்நிலையில் சூப்பர் ஓவருக்கு சென்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்தது.  இரண்டாவதாக பேட்டிங் செய்த  மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்தது பரபரப்பான போட்டியில் அசத்தல் வெற்றிப் பெற்று தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

Exit mobile version