பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலையில் 100க்கும் மேலான கைவினைப் பொருட்கள்

சுய தொழில் செய்து, பெண்களும் வாழ்வில் முன்னேறலாம் என்று நம்பிக்கை அளிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும், பனை ஓலையில் 100க்கும் மேலான கைவினைப் பொருட்களை செய்து அசத்தி வரும் ஒரு வழிகாட்டி பெண்மணி குறித்த செய்தித் தொகுப்பு இது.

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள சேதுக்குவாய்த்தானில் வசித்துவருகிறார் கிரேஸ் ஜூலியட் டயானா.

கணவர், இரண்டு குழந்தைகள் என்று சராசரியான குடும்பப் பெண்ணாக வாழ்ந்தவர், 2016ல், மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்த பிறகுதான், அவரது வாழ்வில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த பயிற்சிகளை மேற்கொண்டு, பொருட்களை தயாரித்தவர், அவர்களின் அறிவுரையின்படி, கண்காட்சிகளிலும், கல்லூரிச் சந்தைகளிலும் தான் தயாரித்த பொருட்களை, தானே விற்பனை செய்து ஈட்டிய வருவாயை, குடும்பத்துக்கு கொடுத்தது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார் கிரேஸ் ஜூலியட் டயானா.

ஒருகட்டத்தில், தனக்கென தனி அடையாளத்தை நிலைநாட்ட விரும்பியவர், அதற்காக கையில் எடுத்த பொருள், பனை ஓலை!… தனது தாயார் அளித்த பயிற்சியைக் கொண்டு, பனை ஓலையில் சிறுசிறு பொருட்களை தயாரித்து, கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்தபோது, அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததைக் கண்டவர், முழுக்க பனை ஓலைப் பொருட்களில் கவனம் செலுத்தினார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று, பனை ஓலைப் பொருட்கள்தான் என்பதை உணர்ந்து, கூடை, முறம், பெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, தொப்பி என, 100க்கும் மேற்பட்ட பனை ஓலைப் பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார் கிரேஸ். மகளிர் திட்ட அமைப்பாளர்களின் உதவியினால், பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, அங்குள்ள பிரத்யேக பனை ஓலைப் பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டார். தற்போது, தனது ஊரிலேயே கடை அமைத்து, பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு, மகளிர் குழுவினருக்கு பயிற்சியும் வழங்கி வருகிறார்.

 

அரசு வழங்கிய பயிற்சியில், தான் கற்றுக் கொண்டதை, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்களின் வாழ்விலும் ஏற்றம் பெற விழையும் நம்பிக்கைப் பெண் கிரேஸ் ஜூலியட் டயானாவின் ஒரே வேண்டுகோள், அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, பனை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதே!

Exit mobile version