மகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வாழ்ந்த எழுத்தாளர், நடிகர், பன்முக கலைஞர் கிரிஷ் ரகுநாத் கர்நாட் தனது 81ஆவது வயதில் இன்று மறைந்தார்.
தமிழக மக்களுக்கு கிரிஷ் கர்நாட் ஒரு நடிகராக நன்கு அறிமுகமானவர். காதலன், ரட்சகன், மின்சாரக் கனவு – உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிகரமான மக்கள் அறிமுகத்தைக் கொடுத்தன. ஆனால் அதையும் தாண்டிய சிறப்புகளை உடையவர் கிரிஷ் கர்நாட்.
திரைத்துறையில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட வேறு பல முகங்களும் இவருக்கு உண்டு. தனது படங்களுக்காக 10 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர் கிரிஷ் கர்னாட்.
கன்னடத்தில் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக கிரிஷ் கர்நாட் மதிக்கப்படுகிறார். இவரது கன்னட நாடங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தனது இலக்கியப் பணிகளுக்காக இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதை 1998ல் பெற்ற கிரிஷ் கர்நாட், முன்னதாக 1994ல் தேசிய அளவிலான சாகித்ய அகாடமி விருதையும், 1992ல் கன்னட சாகித்ய அகாதமி விருதையும் வென்றவர்.
மத்திய அரசால் 1974ல் பத்மஸ்ரீ, 1992ல் பத்மபூஷன் விருதுகள் அளித்து கவுரபடுத்தப்பட்டவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அக்கினிச் சிறகுகள் ஆங்கில ஒலிநாடாவுக்கு குரல் கொடுத்தவரும் இவரே.
3 ஆண்டுகளுக்கு முன்பு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்றபோது சாலை விபத்திற்கு உள்ளான கிரிஷ் கர்நாட் அதன் பின்னர் தொடர் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகி வந்தார். இன்று உடல் உறுப்புகள் தொடர்ந்து செயலிழ்ந்ததால் பெங்களூரு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.