தனுஷ்……உலக சினிமா வரை ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழ் நடிகரின் பெயர். இவனெல்லாம் சினிமாவில் என்ன சாதிக்கப்போகிறான் என நினைத்த அத்தனை பேருக்கும் தனது வெற்றியின் மூலம் பதிலளித்துக் கொண்டிருக்கும் அசாத்திய திறமையாளர். இதே மே 10ல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தனது 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தனுஷுக்கு முதலில் வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் மிகச்சிறந்த சமையற்கலைஞனாக வரவேண்டும் என விரும்பிய வெங்கடேஷ் பிரபுவை தமிழ் சினிமாவோ தனுஷ் என்ற பெயரில் தத்தெடுத்துக் கொண்டது. அப்பா சினிமாவில் பிரபல இயக்குநர். வாரிசு நடிகர்கள் என்ற போர்வையில் தம்பி தனுஷை ஹீரோவாகவும், அண்ணன் செல்வராகவனை இயக்குநராகவும் “துள்ளுவதோ இளமை” படம் மூலம் அறிமுகப்படுத்தினார் அப்பா கஸ்தூரி ராஜா.
ஹீரோவாக நடிக்க எல்லாம் ஒரு தகுதி வேண்டாமா? என அனைவரும் கிண்டலடித்துப் பேச தனது அடுத்தப்படமான “காதல் கொண்டேன்” மூலம் அவர்களின் கிண்டல்களுக்கு பதிலளித்தார் தனுஷ். இதனையடுத்து வெளியான “திருடா திருடி” படத்தில் இடம்பெற்ற “மன்மதராசா” பாட்டு தனுஷின் முதல் அடையாளமாக மாறியது. ஒல்லியான உடலைக் கொண்டு “சுள்ளான்” படத்தில் அவர் நடித்ததையெல்லாம் பார்க்கும்போது நமக்கே சிரிப்பு வரும்.
ஆனால் அந்த காலக்கட்டத்தில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார். அன்றைய நிலையில் “சூப்பர் ஸ்டார் மருமகன்” என்ற ஒரு பெயர் அவரின் மிகப்பெரிய அடையாளமாக மாறியது. ஆனால் அதை மாற்றி எழுத நினைத்தார் தனுஷ்.
அப்படியான இந்த சுமார் மூஞ்சி குமாரை, “கொக்கி குமார்” ஆக புதுப்பேட்டையில் களமிறக்கினார் செல்வராகவன். இன்றைக்கு ரீ-ரிலீசாகி ஹவுஸ்புல் ஆன இந்தப் படத்தை அன்றைக்கு யாருமே கண்டுக்கொள்ளவேயில்லை. அதில் தனுஷின் நடிப்பை பாராட்டியிருந்தால் இன்றைக்கு அவர் இவ்வளவு உயரத்தை அடைந்திருப்பாரா என்பதில் சந்தேகம் தான். இதே சமயத்தில் தான் தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இயக்குநர் “பாலு மகேந்திரா” இயக்கத்தில் “அது ஒரு கனாக்காலம்” படத்தில் நடித்தார்.
2007ம் ஆண்டு தனுஷின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆம்! இன்றைக்கு இளைஞர்களால் தனுஷ் கொண்டாடப்பட காரணமாக விதையாக அமைந்த “பொல்லாதவன்” திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. படத்தில் அவர் ஓட்டிய பல்சர் பைக்கை வாங்க ஆசைப்படாத அன்றைய இளைஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். தமிழ் சினிமா தனுஷை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. 2008ல் வெளியான “யாரடி நீ மோகினி” திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்று தந்தது.
மீண்டும் 2010ல் வெற்றிமாறன் இயக்கத்தில் “ஆடுகளம்” படம் வெளியாகி தனுஷின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க இந்திய சினிமாவே பிரமிப்பாக பார்த்தது. அவரும் கூட இதை நினைத்து பார்த்திருக்கமாட்டார். இதன்பிறகு தனுஷ் தான் எப்படிப்பட்ட திறமையாளன் என்பதை உலகுக்கு காட்ட ஆரம்பித்தார்.
2012ல் தனுஷின் நடிப்பில் வெளியானது “3” திரைப்படம். மனைவி ஐஸ்வர்யா டைரக்டராக அறிமுகமாக, தனுஷோ நடிகர், பாடலாசிரியர், பாடகர் என வித்தைக் காட்ட ஆரம்பித்தார். அதில் அனிருத் இசையில் இடம்பெற்ற, “ஒய் திஸ் கொலவெறி” பாடல் யூ-டியூப்பில் 14 கோடிக்கும் மேல் பார்த்தாக வரலாறு சொல்ல உலகமே கொலவெறியாக அந்த வார்த்தையை உச்சரித்தது. ஒரே பாட்டின் மூலம் இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் தேனீர் விருந்துக்கு அழைக்கப்பட்டவர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். 2013ல் “எதிர் நீச்சல்” படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
படித்துவிட்டு வேலையில்லாமல் கவலைப்பட்டு கொண்டிருந்தவர்களை காலரை தூக்கிவிட்டு ”விஐபி”என “வேலையில்லா பட்டதாரி” படத்தில் பெருமைப்பட வைத்தார் தனுஷ்.
2014ல் தனுஷ் இந்திப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்தியில் “ராஞ்சனா”வகவும், தமிழில் “அம்பிகாபதி”யாகவும் வெளியான அந்தப்படத்திற்கு பிறகு “பாலிவுட் சூப்பர்ஸ்டார்” அமிதாப்பச்சனுடன் “ஷமிதாப்” படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து அசத்தினார் தனுஷ்.
2015ல் தனுஷ் மூன்று வேடத்தில் நடித்த “அனேகன்” படமும், வீட்டு வாசலில் தொடங்கி தெரு வரை சிங்கிள் ஷாட்டில் ஆடிக்கொண்டே வரும் “மாரி” தனுஷையும் அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
அவருக்குள் இருந்த இயக்குநர் ஆசையையும் “ப.பாண்டி” படம் மூலம் நிறைவேற்றி வெற்றிக்கண்டார். இப்போது மீண்டும் படம் இயக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும் கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் கூட “The Extraordinary Journey of the Fakir” படம் மூலம் வெற்றிக்கொடி ஏற்றினார் தனுஷ்.
கடைசியாக வடசென்னை அன்புவாக, ரசிகர்கள் மனதில் நங்கூரமிட்டார் தனுஷ். யூ-டியூப் வரலாற்றில் அவரின் மாரி-2 படப்பாடலான “ரௌடி பேபி” பாடல் அதிகப்பட்சமாக 30 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கை தாண்டி அசைக்க முடியாத சாதனையைப் படைத்தது.
இன்றளவும் ரசிகர்களால் “இந்தியன் புரூஸ்லி”…. “இளைய சூப்பர் ஸ்டார்” என செல்லப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார் தனுஷ். நிச்சயம் அவரைப் பார்த்து பொறாமைப்படாதவர்கள் இல்லை. ஆனால் அவரோ திறமையினால் எத்தகைய உயரத்திற்கும் செல்லலாம் என்பதை தன் ஒவ்வொரு படம் மூலமும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் தனுஷ்.
ஒவ்வொரு முறையும் அவரைப் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளிவரும். ஆனால் அதற்கெல்லாம் தனது அமைதியின் மூலம் மட்டுமே பதிலளிப்பார் தனுஷ்.
17 ஆண்டுக்கால வரலாற்றில் அவரின் புதுப்பேட்டை“கொக்கி குமார்”, ஆடுகளம் “கே.பி.கருப்பு”, மயக்கம் என்ன “கார்த்திக்”, விஐபி “ரகுவரன்”, வடசென்னை “அன்பு” ஆகியவை பென்ச் மார்க் கேரக்டர்கள்.
17 years !! Thank you all ??? pic.twitter.com/nAcqNjy19g
— Dhanush (@dhanushkraja) May 10, 2019
அவரின் இந்த 17ம் ஆண்டு விழாவை அவரது ரசிகர்கள் #17YearsOfDhanushism என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
அவரின் ஆடுகளம் படத்தின் ஒரு பாடலின் நடுவே ஒரு வரி வரும். “போராடினால் நாம் வெல்லலாம்…வான் வீதியில் கால் வைக்கலாம்” என்ற அந்த வரிகளுக்கு உதாரணமே தனுஷின் வளர்ச்சிக்கான சான்று.