முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சித்து வரும் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இது சம்பந்தமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என கூறியிருந்தார். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு குழு ஒன்றை அமைத்து முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. அப்பொழுது முல்லைப் பெரியாறு அணை போதிய பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் குழு அறிக்கையை தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதால், புதிய அணை தேவை இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில், கேரள அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என்று தெரிகிறது.