முல்லை பெரியாறு, மேட்டூர் அணை நிலவரம்!

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணையின் நீர்மட்டம் இரு தினங்களில் 2 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களுக்கு பிறகு 99.66 அடியாக சரிவு.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கான நீர்வரத்து 4 ஆயிரத்து 157 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் கடந்த இரு தினங்களில் இரண்டு அடி உயர்ந்தது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.25 அடியாகவும், நீர்வரத்து 3 ஆயிரத்து 779 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு 4 ஆயிரத்து 536 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து ஆயிரத்து 700 கன அடி நீர் சாகுபடிக்காக திறந்து விடப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கன மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் நடப்பாண்டில் இரண்டு முறை 100 அடியை எட்டியது. பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 3 நாட்களுக்கு பிறகு 100 அடியிலிருந்து 99.66 அடியாக சரிந்துள்ளது. காலை நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரத்து 28 கன அடியாகவும், நீர் இருப்பு 64 புள்ளி 402 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து 14 ஆயிரத்து 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version