பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலனை 24 மணி நேரத்தில் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி காணாமல் போன முகிலன், கடந்த 6ஆம் தேதி திருப்பதி ரயில்வே நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை எழும்பூரிலுள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்ட முகிலனின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதைத்தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் ராஜராஜேஸ்வரி என்ற பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், கடந்த 7ம் தேதி மாலை முகிலனை கரூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்து, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து நெஞ்சு வலி என கூறியதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், சிபிசிஐடி போலீசார் முகிலனை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியபோது, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் 24 மணி நேரத்தில் ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பித்தார். அப்போது முகிலனுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய முடியாது என கோரிக்கை வைக்கப்பட்டடதால், முகிலனின் விருப்பப்படி அழைத்துசெல்ல நீதிபதி உத்தரவுபிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் டிரான்ஸிஸ்ட் வாரண்ட் பெற்று, முகிலனை கரூருக்கு அழைத்து செல்கின்றனர்.