உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வித்தியாசமான விளையாட்டுகள், கலைகளால் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன. அந்த வகையில், தென்கொரியாவில் சேற்றுத் திருவிழா மிக பிரபலம்…. வாங்க பார்க்கலாம்….
தென்கொரியாவில் கடலோர நகரமான போரியாங்கில் (city of Boryeong) 1998-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சேற்றுத் திருவிழா நடைபெறுகிறது.
உடல் முழுவதும் சேற்றை பூசி கொள்வதால் தோல் நோய் அகலும் என தென்கொரிய மக்களிடையே ஆழமான நம்பிக்கை நிலவுகிறது.
தலைநகர் சியோலில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது போரியாங் கடற்கரை நகரம். ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் மக்கள் வரையில் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். சேற்றை ஒருவர் மீது மற்றொருவர் பூசியும், வாரி இறைத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
சேற்றில் சறுக்கு விளையாட்டு, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளும் களைகட்டும். ஆண்கள், பெண்கள் என தனித்தாக போட்டிகள் நடைபெறும். ஒருபுறம் ஆடல், பாடல், மற்றொரு புறம் விளையாட்டு என ஒரு வாரத்திற்கு திருவிழா களைகட்டும்.
ஜூன், ஜூலை மாதங்களில் சேற்று திருவிழாவை காண்பதற்கு சர்வதேச சுற்றுலா பயணிகளும் படையெடுப்பது வழக்கம். ஆனால் 2020 ம் ஆண்டு ஏமாற்றமான ஆண்டாக மாறி போய் விட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாரம்பரிய சேற்று திருவிழாவை இந்தாண்டு, தங்களது வீடுகளில் கொண்டாடிய தென்கொரிய மக்கள், ஆன்லைனில் மற்றவர்களுடன் வீடியோவை பகிர்ந்து கொண்டனர்.