அரவக்குறிச்சி தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூரில் காவிரி ஆற்றில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதேபோல சின்னதாராபுரத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், கஜா புயலால் பாதித்த கிராமங்களில் விரைவில் பேருந்துகளை இயக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.