மாராட்டியத்தில் பாஜக சிவசேனா கூட்டணி உறுதியானதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதியிலும், சிவசேனா 23 தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும், மராட்டியத்திலும் பாஜக கூட்டணி அரசை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இதனால் இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போடியிடும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, உத்தவ் தாக்கரேவை இன்று சந்தித்து பேசினார். அப்போது, இருகட்சிகளும் கூட்டணியை உறுதி செய்தன. இதையடுத்து, மக்களவை தேர்தலில் மாராட்டியத்தில் 25 தொகுதிகளில் பாஜகவும் 23 தொகுதிகளில் சிவசேனாவும் போட்டியிட உள்ளன. அதேபோல், சட்ட மன்ற தொகுதியில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக உத்தவ் தாக்ரேவும், அமித் ஷாவும் கூட்டாக அறிவித்தனர்.