3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே, ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் வகையில், 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் சேவையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் ரேஷன் பொருட்களை எளிதாக பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவிலேயே முதல்முறையாக, 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

33 மண்டலங்களில் இயக்கப்படும் இக்கடைகள் மூலம், பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 5,36,437 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தொடக்கமாக, 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை அவர் வழங்கினார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் M-AUTO நிறுவனத்தின், 13 புதியவகை ஆட்டோக்களை, முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மகளிர் ஓட்டுநர், மகளிர் வாகன பழுது நீக்காளர் என இரண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version