மண்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் துவங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மலையின் அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால், மலை ரயில் செல்லும் பாதைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், கடந்த ஒரு வாரமாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்த நிலையில் சேதமடைந்த பகுதிகளில் புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்கு பிறகு மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.