நீலகிரி மலை ரயில் கட்டணத்த பலமடங்கு உயர்த்தி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையில் நீராவி இன்ஜின் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயிலில் குன்னூர் முதல் ஊட்டி இடையே உள்ளுர் மக்கள் பலரும் பயணிக்கின்றனர். இதுவரையில் மலை ரயிலில் பயணிக்க குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு குன்னூர் – ஊட்டி இடையே 10 ரூபாய் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் புதிய கட்டணம் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
புதிய கட்டணத்தின்படி குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 35 ரூபாய் மட்டுமே செலுத்தி வந்த பயணிகள் இனி 80 ரூபாய் செலுத்த வேண்டும். அதே போல் குன்னுரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 295 ரூபாய் செலுத்தி வந்த பயணிகள் இனி 370 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பாதிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகம் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.