மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் : மாற்றங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் நிறைவேறினால் போக்குவரத்து சட்டத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள் என்னென்ன? வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை எவை? – இந்தத் தொகுப்பில் பார்ப்போம்…

கடந்த 2017-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம், அப்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது. தற்போது இந்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா இந்த முறை ராஜ்யசபாவில் நிறைவேறினால் போக்குவரத்து சட்டங்கள் பெரும் மாற்றங்களை சந்திக்கும். அப்போது என்னென்ன முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பார்ப்போம்.

1.போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வசூலிக்கப்படும் அபராத தொகை, ஏறக்குறைய பத்து மடங்குகளுக்கு அதிகரிக்கப்படும்.

2.ஓட்டுநர் உரிமம் தொடர்பான கால அளவுகள் மாற்றி அமைக்கப்படும். ஓட்டுநர் உரிமம் ஒருமுறை ரத்தானால் அதைப் புதுப்பிக்க, ஓட்டுநர் புத்தாக்க பயிற்சிகளை எடுப்பது கட்டாயமாக்கப்படும்.

3.போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கொண்டுவரப்படும். விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு சமூகச் சேவைப் பணிகளில் ஈடுபடுவது தண்டனையாக அளிக்கப்படும்.

4.ஓலா, உபேர் போன்ற போக்குவரத்து சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமங்களை வழங்குவது முறைப்படுத்தப்படும்.

5.விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் மனிதநேயமுடையவர்கள் காவல்துறையின் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.

6.வாகனத்திலோ, வாகன உதிரி பாகத்திலோ குறை இருப்பதாக அதிக புகார்கள் வந்தால், விற்பனையான வாகனம் அல்லது உதிரிபாகத்தைத் திரும்பப் பெற குறிப்பிட்ட நிறுவனத்ததுக்கு ஆணையிடும் அதிகாரத்தை அரசு பெறும்.

7.விதியை மீறிய சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் அல்லது அதற்குப் பொறுப்பான அதிகாரி அந்த விபத்துக்குப் பொறுப்புடையவராக கருதப்படுவார்.

8.18 வயதுக்கு கீழான வயதுடையவர்களால் வாகன விபத்து ஏற்பட்டால், வாகனத்துக்கு உரிமையாளர் அல்லது அந்த வாகன ஓட்டியின் சட்டபூர்வ பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

9.மோட்டார் வாகன விபத்து நிதி – என்ற ஒன்று உருவாக்கப்படும். ஒருவருக்கு விபத்து நேரும்போது அவசரத் தேவைகளுக்கான பணம் இதிலிருந்து வழங்கப்படும். வழக்கு முடிவில், கிடைக்கும் தொகையிலிருந்து இது கழிக்கப்படும்.

10.விபத்திற்குக் காரணமான ஒருவர், தன்மீது எந்தப் பிழையும் இல்லை என்று நிரூபித்தால் அதிகபட்ச 5 லட்சம் மட்டுமே அவரிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.

11.ஒரு விபத்து நடந்த ஆறு மாதத்துக்குள்ளாகவே இழப்பீடு கேட்டு வழக்கு பதிய வேண்டும். ஆறு மாதம் கடந்தால் யாரும் இழப்பீடு கோர முடியாது.

12.விபத்தில் காயமடைந்த ஒருவர் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி காப்பீடு பெறலாம்.

13.விபத்து ஏற்படுத்தியவரை கண்டறிய முடியாவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டு இறப்புக்கு ரூ.2 லட்சம் வரையும், காயங்களுக்கு ரூ.50,000 வரையும் நிதி வழங்கப்படும்.

14.போக்குவரத்து திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.

15.வாகன உரிமங்கள் வழங்குவதற்கான தேசியப் போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்படும், இதனால் போக்குவரத்து உரிமம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் போகும். இந்தக் கொள்கை வரையறுப்பதற்கு முன்னர், மத்திய அரசானது மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும்.

16.இரு வேறு மாநிலங்களின் இடையே போக்குவரத்து திட்டங்கள் வகுக்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசிடம் செல்ல வாய்ப்பு உள்ளது.

Exit mobile version