கிராம இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.
சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் 110-விதியின் கீழ், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, ரூ.76 கோடியே 23 லட்சத்து 9,300 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்துவார்கள். ஒவ்வொரு பகுதியிலும் விளையாட்டு மைதானங்களும் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறையின் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்