13 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் அவனது தாய் மற்றும் கள்ளக்காதலனை 3 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மலையடி பகுதியைச் சேர்ந்த வசந்தா, தனது கணவனை பிரிந்து மகள், மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மகன் லால் கிருஷ்ணன் தூக்கமாத்திரை உட்கொண்டதாக வசந்தா நாடகமாடியுள்ளார். சிகிச்சை பலனின்றி இறந்த லால் கிருஷ்ணனின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வசந்தாவின் கணவர் புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில், கடந்த ஒராண்டு முன்பு சுபனன் என்ற 35 வயது நபரை தனது மகளுக்கு வசந்தா திருமணம் செய்து கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், மீண்டும் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், வசந்தாவுக்கும் சுபனனுக்கும் தொடர்பு இருந்ததை பார்த்ததால் லால்கிருஷ்ணனை இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தாவையும் சுபனனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.