திருமணமாகாமல் பிறந்த குழந்தையை விற்று, ஆடம்பரமாக வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த காதலன் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் உட்பட மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பவானியும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமாரும், 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

காதலர்கள் இருவரும் அத்துமீற, கர்ப்பமான பாவனிக்கு கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருமணமாகாமல் பிறந்ததால், குழந்தையை வேறு ஒரு நபருக்கு கொடுத்துவிட்டு, பின்னர் முறைப்படி இருவரும் திருணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்னர், உறவினருக்கு குழந்தை தத்து கொடுப்பதாக கூறி குழந்தையை எடுத்துச் சென்று விற்பனை செய்த சரத்குமாரின் போக்கு முற்றிலுமாக மாறி இருக்கிறது.

முதலில் குழந்தையை தத்து கொடுத்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய சரத்குமார், அதன் பிறகு பவானி பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

ஒரு கட்டடத்தில் சந்தேகம் வலுக்கவே, இதுகுறித்து பவானி விசாரித்த போது, சரத்குமாருக்கு, சென்னை திருப்போரூரை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவானி, இது தொடர்பாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, சரத்குமார் தனக்கும் பவானிக்கு பிறந்த குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டு, அந்த பணத்தில் தனக்கு புதிதாக நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சரத்குமாரை கைது செய்த போலீசார், குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட ஏழுமலை, நந்தினி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்து, குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை தேடி வந்த காவல்துறையினர், ஜோதி, கலைவாணி, முனியம்மாள், நதியா ஆகியோரையும் குழந்தையை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த தாய் பவானியையும் கைது செய்துள்ளனர்.

மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையை ஒப்படைத்தனர்.

குழந்தையை விற்ற வழக்கில் தாய், தந்தை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது வந்தவாசியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version