வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசும் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், 1983ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ஒதுக்கீடு அளிக்க முடியுமா? உள்ளிட்ட 6 கேள்விகளை அரசு தரப்புக்கு நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறிய நீதிபதிகள், 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் உத்தரவு வன்னியர் சமூகத்தினர் இடையே பெரும் பரபரப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே இடமளிக்கப்பட்ட மாணவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க, மேல்முறையீடு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாமக வழக்கறிஞர் பாலுவின் செய்தியாளர் சந்திப்பை காண
⬇⬇⬇ ⬇⬇⬇