ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோவின் ஷெர்மெத்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மூர் மாஸ்கான் என்ற இடத்திற்கு விமான சிப்பந்திகள், பயணிகள் உள்பட 78 பேருடன் சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க முற்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விமான விபத்தையடுத்து மாஸ்கோவில இருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புக் குழுவை பிரதமர் திமித்ரி மெத்வேதேவ் நியமித்துள்ளார்.