இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், தொற்றின் அளவு தொடர்ந்து தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
நாடு முழுவதிலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மகாராஷ்டிராவில் 36 ஆயிரத்து 265 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 15 ஆயிரத்து 421 பேருக்கும், டெல்லியில் 15 ஆயிரத்து 97 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி தொற்று பாதிப்பு சராசரியாக 56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 302 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 178ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றில் இருந்து ஒரே நாளில் 30 ஆயிரத்து 836 பேர் குணமடைந்துள்ளனர். 27 மாநிலங்களில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 377 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 7ஆக அதிகரித்துள்ளது.