காவலன் செயலியை இதுவரை 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற, காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காவல்துறை பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறினார். தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரப்படி, சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சிறப்பு உள்ளதாகக் கூறிய அவர், காவல்துறையில் பெண்களுக்காகத் துணை ஆணையர் தலைமையில் 35 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, காவலன் செயலியின் முக்கியவத்துவத்தை மக்கள் உணர்ந்திருப்பதாகவும், கடந்த சில நாட்களில் மட்டும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களிடம் தகவல்களைப் பரிமாறக் கூடாது என்றும் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்தார்.