எபோலாவைரஸால் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காங்கோவில் எபோலா வைரஸ் நோயால் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நோய்க்கு இது வரை 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கோவில் சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 5 வது முறையாக இத்தகைய அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவில் ஜிகா வைரஸ் பரவிய போதும், மேற்கு ஆப்பிரிக்காவில் இதே எபோலா வைரஸ் பரவிய போதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டிற்குள் எபோலா வைரஸ் நோயார் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது மீண்டும் எபோலோ வைரஸ் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த வைரஸால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது

Exit mobile version