தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 59 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தேவையான மழையில் 48 சதவீதத்தை வடகிழக்கு பருவமழை வழங்குவதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.
அதே நேரத்தில், வங்கக் கடலிலும் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின. இதனால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து நகர்கள் வெள்ளக்காடாயின.
இந்த நிலையில், கடந்த ஆண்டுகளை விட 2021 ஆம் ஆண்டின் மழை, 59 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 6 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவக்காற்று இன்னும் வீசுவதால், மேலும், சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.