பொறியியல் கல்லூரிகளில் அதிகம் பேர் விண்ணப்பம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பாண்டில், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில், பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய விண்ணப்பங்கள் நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில்,கூடுதலாக 14 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்தாண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version