தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் சதவிகிதம் 46ஆக உள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்தறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 266 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் ஒரேநாளில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 458ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 33 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 9 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அரியலூர், மதுரை, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதன்படி ஒரேநாளில் 38 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 379ஆகவும், குணமடைந்தோர் சதவீதம் 46ஆகவும் உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆயிரத்து 611 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version