காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஒகேனக்கலில் வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து காணப்பட்டு வந்தநிலையில், தற்போது வினாடிக்கு ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கோடை சீசனில் வினாடிக்கு குறைந்தபட்சம் 400 கனஅடியாக இருந்து வந்தநிலையில் கடந்த வாரம் விநாடிக்கு 800 கன அடியாக உயர்ந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரத்து 300 கனஅடியாக இருந்த உபரி நீர், இன்று காலை நிலவரப்படி, 1,400 கனஅடியாக உபரி நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மேலும் உபரி நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.