தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 24 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. நடப்பு ஆண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் பதிவான மழை அளவு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழைப் பொழிவை பெறுகின்றன. அந்த வகையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 342 மில்லி மீட்டர். இந்நிலையில், இந்த ஆண்டு பதிவாகியுள்ள மழையின் அளவு 424 புள்ளி 1 மில்லி மீட்டர். இது இயல்பை விட 24 சதவீதம் அதிகம்.
5 ஆண்டுகளில் பதிவான மழை அளவின் விவரங்கள் :
கடந்த 2016-ல் 222.4 மி.மீட்டர் என்ற அளவில், இயல்பை விட 2 சதவீதம் குறைவாக மழை பதிவானது. 2017 ஆம் ஆண்டே தமிழகத்தில் அதிக அளவிலாக, 327.6 மி.மீட்டர் மழை பதிவானது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து, 2018, 2019 ஆம் ஆண்டுகளில்,189.6 மி.மீட்டர் மற்றும் 235.2 மி.மீட்டர் மழை பதிவானது. இது இயல்பை விட மிகக் குறைவாக 16 மற்றும் 6 சதவீதமாக பதிவானது. 2020-ல் 424.4 மி.மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 24 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது தான் கூடுதல் மழை பொழிவை பெற்றுள்ளது தமிழகம்.
மாவட்ட வாரியாக பதிவான மழையின் அளவுகள் :
அதிகபட்சமாக, நீலகிரியில் 1373 புள்ளி 4 மி.மீட்டர்
கோவையில் 1112 புள்ளி 2 மி.மீட்டர்,
திருப்பூர் 318.8 மீட்டர்,
தேனி 432.3 மி.மீட்டர்.
கரூரில் 387 மி.மீட்டர்,
சேலத்தில் 559.7 மி.மீட்டர்,
கிருஷ்ணகிரியில் 410.3 மி.மீட்டர்
தர்மபுரியில் 495.3 மி.மீட்டர்
நாமக்கலில் 358.9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. புதுவையில் 295.2 மில்லி மீட்டர் மழையும், காரைக்காலில் 455.6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இதே போன்று சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களிலும் செப்டம்பரில் நல்ல மழை பெய்ததன் காரணமாக, இந்த ஆண்டு சென்னையில் 443.6 மில்லிமீட்டர் மழைப் பொழிவு கிடைத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை 24 சதவீதம் அதிகம் கிடைத்துள்ள சூழலில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை சற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் அடிப்படையில், தென்தமிழக மாவட்டங்களில் மழை குறைவாக இருக்கும் என உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.