குட்டி இறந்த சோகம் தாங்க முடியாமல் குரங்குக் கூட்டம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் நடந்தது?
மனித வாழ்வில் தாங்க முடியாத சோகம் என்பது குழந்தைகளின் மரணம்தான். அடித்தட்டு மக்கள் முதல் கோடீஸ்வரர் வரை யாராக இருந்தாலும் குழந்தைகளின் மரணம் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அது பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி, பெறாத பிள்ளையாக இருந்தாலும் சரி, மனிதர்களாகிய நமக்குத் துயரம்தான். அதேபோல் குரங்குகளும் தான் பெறாத பிள்ளைகளிடம் மனிதர்களை மிஞ்சும் அளவில் பாசத்தைப் பொழிந்ததைப் படம் பிடித்து காட்டியிருக்கிறது ஒரு வீடியோ காட்சி.
இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது. பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் ஆவணப்படத்திற்காக, சிங்கவால் குரங்குகள் மத்தியில் அவற்றின் வாழ்க்கை முறைகளைப் படம் எடுக்க குரங்கு ரோபோ ஒன்றை உருவாக்கி அதனுள் கேமரா பொருத்தினர், அந்த ரோபோ பார்ப்பதற்கு லாங்கூர் இனக் குரங்கு போலத் தெரியும். லாங்கூர்களின் சத்தம் அதற்குள் பதியப்பட்டதன் காரணமாக அந்த ரோபோ குரங்கு அதேபோல் சத்தம் எழுப்பும். இந்த ரோபோ, குரங்குக் கூட்டத்தின் கண்ணில் படும்படி வைக்கப்பட்டது. ஒரு பெண் லாங்கூர் ஒன்று, இந்த ரோபோவை எடுத்துத் தன் சொந்த மகன் போல அன்பு காட்டியது. அந்த ரோபோவுக்குப் பேன் பார்ப்பது, கொஞ்சுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டது.
ஒரு கட்டத்தில் தாய்க் குரங்கு, ரோபோ குட்டியுடன் மரம் ஏறியபோது, ரோபோ கீழே விழுந்தது. எந்திரக் கோளாறினால் அதனால் செயல்பட முடியவில்லை. பின்னர் அதன் உடம்பில் அசைவில்லை. உள்ளே இருந்து வந்த சத்தமும் நின்று போனது. தாய்க் குரங்கும், மற்ற குரங்குகளும் விழுந்துகிடந்த ரோபோ குரங்கைச் சுற்றி நின்றன. குட்டி ரோபோவைத் தாய்க் குரங்கு தொட்டுத் தூக்கியது. அசைவு இல்லாததால், குட்டி இறந்ததாக நினைத்த குரங்குகள், ஒன்றொன்றையொன்று கட்டிப் பிடித்து மனிதர்கள் துக்கப்படுவது போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டின. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பார்ப்பவர்களின் கண்களை ஈரமாக்கியது.
குரங்குகளும் மனிதர்களைப் போல் ஒர் இனம் தான். அவைகளுக்கும் தாய்மை, மகிழ்ச்சி, கவலைகள், சோகம் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் அமைந்தது இந்த நிகழ்வு.