கேரளாவை மிரட்டும் குரங்குக் காய்ச்சல்: மருத்துவமும்… முன்னெச்சரிக்கையும்…

‘கியாசனூர் காட்டு நோய்’ எனப்படும் காய்ச்சல் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியது. 1957ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கியாசனூர் பகுதியில் இந்நோய் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது, இதனையே மக்கள் ’குரங்குக் காய்ச்சல்’ – என்று அழைக்கின்றனர். ஃப்ளேவிவிரிடே (Flaviviridae) என்ற வைரஸால் ஏற்படும் பாதிப்பு இது.

கடந்த 2013 முதல் 2015 வரையிலான 3 ஆண்டுகளுக்கு இந்தக் குரங்குக் காய்ச்சல் கேரளாவை ஆட்டிப் படைத்தது. இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேரளாவில் குரங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. சமீபத்தில் இதனால் கேரளாவின் திருநெல்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கேரளாவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரியில் கூட கர்நாடக மாநிலத்தில் இந்நோய் பரவியது, பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.

குரங்குக் காய்ச்சல் எப்படிப் பரவுகிறது? என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? சிகிச்சைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? – பார்க்கலாம்.

ஃப்ளேவிவிரிடே வைரஸை தங்கள் உடலில் கொண்ட சில உண்ணிகள், விலங்குகளைக் கடிப்பதால் அவற்றுக்கு அந்த வைரஸ் கடத்தப்படும். அந்த விலங்குகளைக் கடிக்கும் பூச்சிகள், மனிதர்களைக் கடிக்க நேர்ந்தால் அந்த வைரஸ் மனிதர்களுக்குக் கடத்தப்பட்டு காய்ச்சல் ஏற்படும். எந்தச் சூழலிலும் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு குரங்குக் காய்ச்சல் பரவாது.

தவிர, ஃப்ளேவிவிரிடே வைரசால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மிகச் சமீபத்தில் இறந்த விலங்குகளிடம் இருந்தும் இந்நோயின் பாதிப்பு சுற்றுப்புறங்களில் அதிகமாகப் பரவும்.

விலங்குகளில் செம்மறி ஆடுகள், மாடுகள் போன்றவற்றிலிருந்தும் நோய் பரவும் என்றாலும், குரங்குதான் மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஏனெனில் குரங்குகள்தான் இந்த வகை வைரஸால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன.

சாதாரண வைரஸ் காய்ச்சல் மூன்று முதல் எட்டு நாள்களுக்குள் தானாகவே பெரும்பாலும் சரியாகிவிடும். ஆனால் குரங்குக் காய்ச்சல் அப்படி குணமாகாது. காய்ச்சல் தொடரும் போது உடல் வலிமை பெரிதும் பாதிக்கப்படும். நாள்போக்கில் மரணம் ஏற்படலாம்.

டெங்குக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் அதே ரக வைரஸ் தான் குரங்குக் காய்ச்சலுக்கும் காரணம் என்பதால், டெங்குவைப் போல பல பக்கவிளைவுகளை குரங்குக் காய்ச்சலும் ஏற்படுத்தும்.

குரங்குக் காய்ச்சலின் பக்க விளைவுகளுக்கு உதாரணமாக, ரத்தத்தில் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது, உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படுவது, இரைப்பைத் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது – ஆகியவற்றைக் கூறலாம்.

குரங்குக் காய்ச்சலின் அறிகுறிகளாக, உடல் சில்லிடுவது, தலைவலி, அதிகமான காய்ச்சல், தீவிரமான தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, மனநலம் சார்ந்த பிரச்னைகள் போன்றவைக் கூறலாம்.

பி.சி.ஆர் அல்லது ரத்தப் பரிசோதனை மூலமாகவே குரங்குக் காய்ச்சலை அறிய முடியும். எலிசா பரிசோதனை மூலமும் இதனை உறுதிப்படுத்தப்படுத்தலாம்.

சிகிச்சை என்று இந்நோய்க்கு எதுவும் இல்லை, பாதிக்கப்பட்டவரின் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பது மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தக்கசிவை சீர் செய்வது போன்றவற்றால் குணமாகும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்.

விலங்குகளிடமிருந்து பரவும் நோய் என்பதால், பெரும்பாலும் வனப் பகுதிகளைச் சுற்றியுள்ளவர்களுக்குத்தான் இந்த நோய் ஏற்படும். வனங்களைச் சுற்றி இருப்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் போன்றோர் முன்னெச்சரிக்கைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் .

பூச்சிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதே இதில் முதன்மையானது. இறந்த குரங்குகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். விலங்கு பாதுகாவலர்களின் உதவியோடு இறந்த குரங்குகளின் மீது, `மலதியான்’(malathion powder) என்ற மருந்து தெளித்து, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

நவம்பர் முதல் ஜனவரி மாதம்வரை தான் இந்தக் காய்ச்சல் அதிகமாகப் பரவும். எனவே வனப்பகுதியில் இருக்கும் மக்கள் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்திலாவது முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

தமிழகத்தின் அருகே உள்ள கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைக் குரங்குக் காய்ச்சல் அச்சுறுத்தினாலும், தமிழக அரசின் சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளால் இங்கு குரங்குக் காய்ச்சல் அச்சுறுத்தல் இல்லை. ஆனால், அண்டை மாநிலங்களுக்கும் காட்டுப் பகுதிகளுக்கும் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Exit mobile version