கார்த்தி சிதம்பரத்தின் பிரசார கூட்டத்தில் பணம் விநியோகம்

சிவகங்கையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்தனர். சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி எனுமிடத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அவருடன் வந்த சிலர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதியானதாக தெரிகிறது. இதையடுத்து வெங்கடாசலம், பாலதண்டாயுதம் ஆகிய இருவரை கைது செய்த பறக்கும் படையினர் அவர்களிடம் இருந்து 15 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் திமுக கூட்டணியினர் பல்வேறு இடங்களில் பணம் விநியோகித்து ஓட்டுகளை வாங்க முயற்சித்து வரும் நிலையில் முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version