கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளன. நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த, 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிரிகேட் பரேடு மைதானத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தின. ஒருங்கிணைந்த இந்தியா எனப்பெயர் சூட்டப்பட்ட இப்பேரணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானார்ஜி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசுவாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சதிஸ் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான மல்லிகா அர்ஜூன கார்கே, ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். இப்பேரணிக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மோடியின் ஆட்சி காலாவதியாகிவிட்டது
எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மோடியின் ஆட்சி காலாவதியாகிவிட்டது என குற்றம்சாட்டினார். வருங்காலத்தில் புதியவர்களுக்கு இடமளித்துவிட்டு மோடி ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்றும்; மத்தியில் ஆட்சியை மாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படுவது உறுதி என்றார்.