சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, ராஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உணர்த்திடும் வகையில், சர்வதேச யோகா தினத்தை, ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்சபையில் 2014ஆண்டு வலியுறுத்தியதுடன், ஜூன் 21 ஆம் தேதியையும் பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல உலக நாடுகள் இதனை ஆதரித்தன. இந்நிலையில், 2014 ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன்21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பிறகு முதல்முறையாக 2015 ஆம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 191 நாடுகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் யோகா தினம், நாளை நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், தலைநகர் டெல்லியில், நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள உள்ளனர். உடலுக்கும் மனதுக்கும் பயன் தரக்கூடிய யோகாவை, பள்ளிகளிலும் கொண்டாட மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.