மூன்று நகரங்களில் பரிசோதனை ஆய்வகங்கள் துவக்க விழாவை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உயர்திறன் கொண்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, மகாராஷ்டிராவின் மும்பை, உத்தரபிரதேச மாநிலம் நொய்டா ஆகிய மூன்று நகரங்களில் துவக்கப்பட உள்ளன. ஜூலை 27ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். இதில் மூன்று மாநில முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதனிடையே, ஜூலை 27ம் தேதி மீண்டும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அன்லாக் 2 இந்த மாதத்தோடு முடிவடையும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்த முதல்வர்களின் கருத்துக்களை, பிரதமர் மோடி கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது.