விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை 24ம் தேதி துவக்கி வைக்கிறார் மோடி

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் கிசான் திட்டத்தை வரும் 24ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். அன்றைய தினமே விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் முதல்கட்ட தவணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 2 ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்துள்ள 12 கோடி சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் கிசான் சம்மன் என்ற இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு மூன்று தவணைகளில் வழங்கப்பட உள்ள இந்த திட்டத்தின் முதல் தவணை மார்ச் 31ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24ம் தேதி இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.

இதன் ஒரு நடவடிக்கையாக நாடு முழுவதிலும் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறவுள்ள 2 கோடி விவசாயிகளின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தவணைத் தொகையை 50 லட்சம் விவசாயிகள் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version