தென்கிழக்காசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கத் தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயைச் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாகத் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பாங்காக்கில் தென்கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் உடனிருந்தனர். ஜப்பான் பிரதமருடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே வணிகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.
இதேபோல் வியட்நாம், ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். இன்று நடைபெறும் கிழக்காசியா மாநாட்டிலும், மண்டலப் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.