கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற இந்திய ஜனநாயக திருவிழா நேற்றுடன் முடிவுக்கு வந்தன. 7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே23ல் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி கேதர்நாத்துக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள குகையில் அவர் காவி உடையில் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
யோகாவைப் போல தியானத்தையும் ஊக்குவிக்கும் வகையில், அவரது பரிந்துரையின் பேரில் இதற்காக குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம். இவை அனைத்தும் செயற்கையாக பாறைகளை வெட்டியெடுத்து உருவாக்கப்பட்டவை.
இங்கு தண்ணீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தவிர்த்து மூன்று வேளை உணவு, இரண்டு வேளை தேநீர் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 24 மணி நேரம் உதவிக்கு அழைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி எந்தவித வசதிகளையும் உபயோகிக்காமல் தொடர் 17 மணி நேரம் தியானம் செய்தார்.
மோடியும் இந்த குகைக்கு 2வது முறையாக வருகை புரிந்துள்ளார். இதேபோல் கடந்த மே 11ல் பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா இந்த குகைக்கு வருகை தந்தார்.
மோடியால் பிரபலமான இந்த குகை ஏற்கனவே வாடகைக்கு விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.990 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் ரூ.3000 வாடகை என நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் வருகை குறைந்தது. மேலும் குகை திறக்கப்படும் நேரம் அதிக குளிர் நிலவும் என்பதாலும், 3 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதாலும் பயணிகள் வருவதில்லை. இதனால் தற்போது கட்டணத்தொகை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.