மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் மூவாயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஆயிரத்து 811 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்கீழ் ரிக்ஷா தொழிலாளர்கள், குப்பை பொறுக்குவோர் உள்ளிட்ட ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.
மேலும் 972 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் சோலாப்பூர்-துல்ஜாபூர்-உஸ்மானாபாத் நான்குவழி சாலையையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சோலாப்பூரில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் விநியோகம், பூமிக்கடியில் கழிவுநீர் செல்லும் பாதை அமைத்தல் திட்டம் ஆகியவற்றிற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
மக்களவை பொதுத் தேர்தல், மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் ஆகியவை நெருங்கிவரும் நிலையில், மகாராஷ்டிராவில் மூவாயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி துவக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.