எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை சட்டத்தில் கடைபிடித்து வரும் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் வாரணாசியில் ஆயிரத்து 254 கோடி ரூபாய் மதிப்பில் 50 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குடியுரிமை சட்டம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாக கூறிய பிரதமர் மோடி, தீவிர ஆய்வுக்கு பிறகே குடியுரிமை சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு கடைபிடித்து வரும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது என்றும் பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், குடியுரிமைச் சட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.