இங்கிலாந்தின் இந்திய தூதரகத்தில் நடந்த சுதந்திர தின விழாவின் போது, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளர்.
கடந்த 16-ம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற காலிஸ்தான் சீக்கியர்கள் திடீரென விழா கூட்டத்தினர் மீது முட்டை, பிளாஸ்டிக் பாட்டீல்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் மூவர்ண கொடியை சேதப்படுத்தியதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்திய தூதரகத்தில் நடந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசிய போது இந்திய தூதரகத்தில் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய – இங்கிலாந்து நட்புறவு வலுப்பெற இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.