தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

கொரோனா பரவலுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதுடன், தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்துவது குறித்தும், மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், வென்டிலேட்டர், மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மூன்றையும் தீவிரமாக மேற்கொண்டால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றார். முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதே உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார். கடந்தாண்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது போல், இந்த ஆண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ரெம்டெவிசிவிர் உள்ளிட்ட அனைத்து வகையான மருந்துகளின் இருப்பையும் இந்திய மருந்து உற்பத்தித்துறை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version