ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பேசியது தேர்தல் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது, அவர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கூறிய 11 புகார்களில் 2 புகார் குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டதாக, நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மீதமுள்ள புகார் குறித்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கடந்த 21 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பிரதமர் மோடி பேசியது தேர்தல் விதிமீறல் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.