தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில்
பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,
அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸாக பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 60கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், வருகிற 23-ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.