50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலுக்கு, ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதிய மொபைல் இணைப்புகள் பெறும் போது, கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் அந்த நபரின் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில், சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே 25 கோடி இணைப்புகளை வழங்கியுள்ளது. அதோடு, மற்ற நிறுவனங்களும், இதேபோல் இணைப்புகளை வழங்கியுள்ளன. ஆதார் இணைப்பின் மூலம், ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என உச்சநீதி மன்றம் தடை விதித்தது.
50 கோடி மொபைல் எண்கள், துண்டிப்பு ஆபத்தில் இருப்பதாக வந்த செய்தியை ஆதார் ஆணையம் மறுத்துள்ளது. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கப்படாது எனவும் கூறி உள்ளது