பாஜக அரசுக்கு ஆதரவளித்த 9 எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் மணிப்பூர் அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோர உள்ளது. மணிப்பூரில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலை அடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பைரன் சிங்குடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி தமது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது. இந்த கட்சியின் தலைவரும், மணிப்பூர் துணை முதல்வருமான யும்நம் ஜோய்குமார் சிங், மற்றும் மூன்று அமைச்சர்களும் தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.
அதே போன்று, 3 பாஜக எம்.எல்.ஏக்கள், ஒரு திர்ணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும், மணிப்பூர் அரசுக்கான தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மணிப்பூர் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான சூழலில், முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ஒக்ரம் இபோபி தலைமையில், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.